சென்னை: தென் சென்னை நாடாளுமன்ற திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் குறித்து கூறிய கருத்துக்கு பாஜக மற்றும் தமிழக காங்கிரஸ் சார்பில் ஒரு சேர எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.
தனியார் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு தமிழச்சி தங்கபாண்டியன் அளித்த பேட்டி ஒன்றில், வரலாற்று சிறப்புமிக்க ஒரு ஆளுமையுடன் உணவருந்த நீங்கள் விரும்பினால் யாருடன்? என கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த தமிழச்சி தங்கபாண்டியன், மேதகு தேசிய தலைவர் பிரபாகரன் என்று பதிலளித்தார்.
மேலும் அவரை நேரில் சந்திக்கும் பட்சத்தில் அவரிடம் என்ன கேட்பீர்கள்? என்ற கேள்விக்கு, முள்ளி வாய்க்கால் படுகொலைக்கு மன்னிப்பு கோருவேன் எனவும் தமிழச்சி தங்கபாண்டியன் பதிலளித்தார். இந்த கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த கருத்துக்கு காங்கிரஸ் மற்றும் பாஜக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன.
தமிழச்சி தங்கபாண்டியனின் பதில்கள் குறித்து சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம் தனது X வலைதள பக்கத்தில், "பிரபாகரனை புகழ்வதை ஒரு போதும் காங்கிரஸில் இருக்கும் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 17 தமிழர்களுடன் சேர்ந்து ராஜீவ் காந்தியை படுகொலை செய்துவிட்டு மழுப்புவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பிரபாகரன், வீரப்பன் தமிழ்தேசம் என்பது இந்துத்துவா தேசியவாதத்தை போன்றது" என பதிவிட்டு உள்ளார்.