சென்னை, மாநகராட்சி தண்டையார் பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், சென்னை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை மேயர் மகேஷ் குமார், ராயபுரம் சட்ட மன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர், ஆர். கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் ஆகியோர் கலந்துகொண்டனர். மண்டலம் 4ல் உள்ள மாமன்ற உறுப்பினர்கள் அவரவர் பகுதியில் உள்ள பிரச்சனைகளை முன்வைத்து, அதனை சரி செய்ய மேயரிடம் கோரிக்கைகளை முன் வைத்தனர்.
கலந்தாய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா, “சென்னை மண்டலங்களை பொறுத்தவரை இதுவரை 5 கலந்தாய்வு நடந்ததுள்ளது, இது 6ஆவது கலந்தாய்வு , மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் பகுதி பிரச்சனைகளை முன் வைத்தனர், அனைத்தையும் கேட்டு அறிந்து அதற்கான தீர்வுகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.