சென்னை: தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் சொத்து வரிகளை உயர்த்தி தமிழ்நாடு அரசு (ஏப்.1) அறிவிப்பு வெளியிட்டது. இது குறித்துதமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 15ஆவது நிதி ஆணையமானது, தமது அறிக்கையில் 2022-2023ஆம் ஆண்டு முதல், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் பொருட்டு, 2021-2022ஆம் ஆண்டில், சொத்துவரி தள வீதங்களை (Floor rates) அறிவிக்கை செய்ய வேண்டும் எனவும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரி வீதத்தை உயர்த்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளது.
எனவே, நகராட்சிகள், பேரூராட்சிகளைப் பொறுத்தவரை சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அரசு, ஆணை வழங்கியுள்ளது. மாநகராட்சிகளைப் பொறுத்தவரை அந்தந்த மாநகர மாமன்றங்களின் தீர்மானம் பெற்று சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் கழிவுநீர் அகற்றும் நடவடிக்கையை ஒழுங்குபடுத்துவதற்கான சட்ட மசோதாவை (மே.9) சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிமுகம் செய்துள்ளார். அதில், "2010 ஆம் ஆண்டில், கழிவுநீர் அகற்றல் அமைப்பு மற்றும் கழிவு நீர் தொட்டிகளில் தொழிலாளர்களின் நுழைவை செய்வதற்கான ஆணைகளை அரசானது வெளியிட்டது.
நீர்ப்பீச்சும் இயந்திரங்கள், சேற்றுப்படிவினை அகற்றும் இயந்திரங்கள், நடமாடும் இயந்திரக்குழாய்கள் மற்றும் பிற இயந்திரக் கருவிகளை வாங்கியதன் மூலம் அழிநீர் சுத்திகரிப்பு மற்றும் பேணுதலின் இயந்திரமயமாக்கத்தை அறிமுகப்படுத்தியது.
தமிழ்நாடு (2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி) மக்கள் தொகையில், சுமார் 48.45 விழுக்காட்டளவு மக்கள் நகரப்புறப் பகுதிகளில் வசிக்கின்ற, இந்தியாவிலுள்ள மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களுடன் ஒன்றாக இருக்கிறது.