சென்னை ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஜாம்பஜார், ஐஸ்அவுஸ், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில மாதங்களாக இருசக்கரவாகனங்கள் திருடுபோகும் சம்பவங்கள் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து, காவல் துறையினரிடம் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் ராயப்பேட்டை உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
திருட்டு நடந்த இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தனர், அதில் இருசக்கர வாகனங்களை திருடிச்செல்லும் நபர்கள் பயன்படுத்தும் வாகனம் ஒரு வழக்கறிஞருடையது என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் தஞ்சாவூரைச் சேர்ந்த முகமது சபீக், கல்லுாரி மாணவர் முகமது மொய்தீன், ராமநாதபுரம் கீழக்கரையைச் சேர்ந்த காஜா மொய்தீன் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைதான முகமது மொய்தீன், சென்னை மண்ணடியில் ஒரு வழக்கறிஞரிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். கார் ஓட்டும் நேரம் போக மற்ற நேரங்களில் அவரது இருசக்கர வாகனத்தை திருட்டுத் தொழிலுக்குப் பயன்படுத்தி வந்தது காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது. மொய்தீன் தனது நண்பர்களை அழைத்துச் சென்று சாலைகளில் சைடு லாக் போடாத வாகனங்களை நோட்டமிட்டு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து நள்ளிரவு நேரங்களில் அந்த வாகனத்தை மொய்தீன் குழுவினர் திருடி சென்றுள்ளனர்.
சென்னை ராயப்பேட்டை, ஜாம்பஜார், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் பத்திற்கும் மேற்பட்ட இரு சக்கரவாகனங்களை கள்ளச்சாவி போட்டு திருடியுள்ளனர். திருடிய பைக்கை முகமது சபீக் தனது சொந்த ஊரான தஞ்சாவூரில் குறைந்த விலையில் விற்றுள்ளார். ராயப்பேட்டையில் பைக்கை திருடிய போது காஜா மைதீனின் உருவம் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியது. இதன் மூலம் காஜாமொய்தீன், முகமது மொய்தீன், முகமது ஷபீக் ஆகிய மூவரும் பிடிபட்டதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.