சென்னை:தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்கள் மற்றும் வட இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகள் விஸ்வரூபம் எடுத்த நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகளின் உயர்மட்ட குழு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், தொழிலாளர் நலத்துறை ஆணையர் அதுல் ஆனந்த், சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி மற்றும் ஹோட்டல், கட்டுமானம், தொழில்துறை, வணிகம், பீகார் மக்கள் அசோசியேஷன் உள்ளிட்டோருடன் முக்கிய ஆலோசனை நடத்தியது.
இந்த குழுவில் பீகார் மாநில கிராம வளர்ச்சி துறை செயலாளர் பாலமுருகன், நுண்ணறிவு பிரிவு ஐஜி கண்ணன், தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலோக்குமார் மற்றும் சந்தோஷ் குமார் எஸ்.பி உள்ளிட்ட நான்கு பேர் இடம்பெற்றுள்ளர். இவர்கள் முன்னதாக டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்திருந்தனர். அதன்பின் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். இதற்கு முன்பாகவே, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த குழு தொழிலாளர் நல ஆணையத்தில் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர்.
பீகார் மாநில உயர்மட்ட குழுவின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், “நல்ல முறையில் வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பணிபுரிந்து வருகிறார்கள். தமிழ்நாடு சார்பாக போதிய ஆதரவை அவர்களுக்கு நல்ல முறையில் வழங்கி வருகிறோம். பீகார் மாநில தலைமைச் செயலாளர் தமிழ்நாடு மாநில தலைமை செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்.