சென்னை மாமல்லபுரம் ஈ.சி.ஆர் சாலை பக்கிங்ஹாம் கெனால் பாலம் அருகே சிலை கடத்தல் நடப்பதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு கையில் பையுடன் சந்தேகத்திற்கிடமாக வந்த இருவரை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர், பையை சோதனை செய்தனர். அதில் ஒன்றரை அடி உயரம் கொண்ட பூதேவி உலோக சாமி சிலை ஒன்று இருந்தது. சிலைக்கான தகுந்த ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.