சென்னை:போகி பண்டிகையின் புகைமூட்டம் காரணமாக, சிங்கப்பூர், லண்டன் விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல் ஹைதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
போகி பண்டிகை என்பது பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவைகளை வீட்டின் முன்னால் தெருக்களில் போட்டு எரிப்பது வழக்கம். அதேபோல், சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள கவுல் பஜார், பம்மல், அனகாபுத்தூர், மீனம்பாக்கம், தரைப்பாக்கம், மணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலையில் இருந்து குடியிருப்பு பகுதி மக்கள் உற்சாகமாக போகி பண்டிகையை கொண்டாட தொடங்கியுள்ளனர்.
அவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள பழைய கழிவுப் பொருட்கள், பிளாஸ்டிக் டயர்கள் போன்றவைகளை தெருக்களில் எரித்ததால், அதனால் ஏற்பட்ட புகை மூட்டங்கள், விமான நிலைய ஓடுபாதை மைதானங்களை மைதானத்தை சூழ்ந்து கொண்டது. அதோடு பனிமூட்டமும் சூழ்ந்து கொண்டதால், விமான நிலைய ஓடுபாதையே தெரியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து அதிகாலை 4.35 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து 164 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அதிகாலை 5.45 மணிக்கு, 260 பயணிகளுடன் லண்டனில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஆகிய இரண்டு விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் ஹைதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
அதேபோல், டெல்லியில் இருந்து 117 பயணிகளுடன் அதிகாலை 5.20 மணிக்கு, சென்னையில் தரையிறங்க வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னையில் போகிப் பண்டிகை புகைமூட்டம் பனிமூட்டம் காரணமாக, சென்னையில் தரை இறங்க முடியாமல் ஹைதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதை அடுத்து சென்னையில் தரை இறங்க முடியாமல், ஹைதராபாத் திரும்பிச் சென்ற விமானங்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்தது.
இந்த விமானங்களில் மேலும் சில விமானங்கள் ஹைதராபாத், பெங்களூர், கோவை, திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட வாய்ப்பு உள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் மும்பை, டெல்லி, மஸ்கட் உள்ளிட்ட பல்வேறு விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தன. அந்த விமானங்களும் பெங்களூர், ஹைதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதைப்போல் சென்னையில் இருந்து அந்தமான் புனே, மும்பை, டெல்லி, தூத்துக்குடி, ஹைதராபாத், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் பனிமூட்டம் காரணமாக புறப்பட முடியாமல் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. வருகை புறப்பாடு விமானங்கள், 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதையும் படிங்க:சென்னை டூ அயோத்தி விமானம்:அயோத்தி ராமர் கோயிலுக்கு போறீங்களா..டிக்கெட் எவ்வளவு தெரியுமா..?