சென்னை:அமலாக்கத்துறை, சிபிஐ, மற்றும் வருமான வரித்துறை ஆகியவை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும், பாஜகவின் ஆயுதமாகவும் செயல்பட்டு வருகிறது என தமிழக காங்கிரஸ் கட்சியின், தகவல் தொடர்பு பொறுப்பாளர் பவ்யா நரசிம்மமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் ’இந்திய ஒற்றுமை நீதி பயணம்’ குறித்த நூலின் தமிழாக்கம் வெளியிடப்பட்டது. இதில், தமிழக காங்கிரஸ் தகவல் தொடர்பு பொறுப்பாளர் பவ்யா நரசிம்மமூர்த்தி, ஊடகத்துறைத் தலைவர் கோபண்ணா, கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பவ்யா பேசுகையில் “ 10 ஆண்டு காலமாக, பா.ஜ.க ஆட்சி, நமது மக்களையும் இந்திய ஜனநாயகத்தையும் மற்றும் அரசியலமைப்பையும் கடுமையாகப் பாதித்துள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்குத் தலைதூக்கியுள்ள, வேலையில்லா திண்டாட்டம் இளைஞர்களின் கனவுகளையும் எதிர்காலத்தையும் பாஜக தகர்த்துள்ளது. ஒரு சில கோடீஸ்வரர்களின் இந்த ஆட்சியைக் கைப்பாவையாக்கி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும், பாஜகவின் ஆயுதமாகச் செயல்பட்டு வருகிறது. தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் என தேசிய குற்ற ஆவண அமைப்பு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒருமுறைப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, 51 முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.” எனத் தெரிவித்தார்.