தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 13, 2020, 7:12 PM IST

ETV Bharat / state

'கண்ணன் ஆன்மா சாந்தியடைய தமிழர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்' - இயக்குநர் பாரதிராஜா

சென்னை: ஒளிப்பதிவாளர் கண்ணனின் ஆன்மா சாந்தி அடைய உலகத் தமிழர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா
பாரதிராஜா

தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் இன்று (ஜூன் 13) உடல்நலக்குறைவால் காலமானார். பாரதிராஜாவின் நெருங்கிய நண்பரான கண்ணன், அவரது பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். கண்ணனின் மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "சில நேரங்களில் உங்களோடு ஒருசில மகிழ்ச்சியான செய்திகளையும் பகிர்ந்து கொண்டுள்ளேன். சில நேரங்களில் வருத்தங்களையும் உங்களோடு நான் பகிர்ந்துகொண்டுள்ளேன்.

என் வாழ்வில் பெரும் பகுதியைக் கழித்த என் துணைவியாரைக் காட்டிலும், நான் அதிகளவில் நேசித்துவந்த ஒரு மிகப்பெரிய மகா ஒளிப்பதிவு கலைஞன் கண்ணன். நான் படப்பிடிப்பிற்குச் செல்லும்போதெல்லாம் கேமராவை எடுத்துக்கொண்டு செல்வதில்லை. கண்ணனையும் எனது இரண்டு கண்களையும் தான் எடுத்துச் செல்வேன். அவருக்குத்தான் ஆகாயத்தின் மறுபக்கத்தைப் பார்க்கத் தெரியும். 40 ஆண்டுகாலம் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். இப்போது அவரது மறைவை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

இந்த கரோனாவில் கிடுக்குப்பிடிக்குள் சிக்கி அவரின் உடலை நேரில் தரிசிக்கக்கூட முடியாத சோகத்தில் இருக்கிறேன். ஒரு அற்புதமான கலைஞனை நான் மட்டுமல்ல, இந்தக் கலையுலகமும் இழந்துள்ளது. என்னுயிர் தோழன் கண்ணன், ஸ்லம் பேக்ரவுண்ட் படம் அதற்கு என்ன ஒளிப்பதிவு தேவை, ஒரு பீரியட் பிலிம் ’நாடோடி தென்றல்’, அதற்கு எப்படி ஒளிப்பதிவு செய்ய வேண்டும், ’காதல் ஓவியம்’ அதற்கு எப்படி ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்ற வித்தைகளை எல்லாம் தெளிவாகத் தெரிந்துகொண்ட ஆகச்சிறந்த கலைஞன்.

என்னோடு 40 ஆண்டுகள் வாழ்ந்தவர், இப்போது இல்லை என்பதை என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. எனக்குக் கிடைத்த புகழில் பெரும்பகுதி கண்ணனுக்குத்தான் சேர வேண்டும். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும், என்று என்னால் ஒப்புக்குப் பேச முடியாது.

உலகத் தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் பண்பாட்டை, கலாசாரத்தை ஒளிப்பதிவின் மூலம் தெரிவித்த அந்த மகா கலைஞனுக்கு உலகத் தமிழர்கள் அனைவரும் அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details