மத்தியில் ஆளும் பாஜக அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் முற்றுகையிட்டு கடந்த 26ஆம் தேதிமுதல் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சியிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் இன்று நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்த திட்டமிட்டதை அடுத்து காங்கிரஸ், திமுக, அதன் கூட்டணிக் கட்சியினர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டில் முழு கடை அடைப்புப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாநிலத்தின் எதிர்க்கட்சியான திமுக கேட்டுக்கொண்டது.
இதனையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள், அரசு அலுவலர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன.