சென்னை:உலகளவில் தொழில்நுட்பம் என்பது எத்தனையோ கற்பனை செய்ய முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளது. அதே தொழில்நுட்பம் திரைத்துறையிலும் பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்தி வருகிறது என்பது நிதர்சனமான உண்மை. நாம் இன்னமும் ஆரம்பகட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தவே திணறி வரும் சூழலில் ஹாலிவுட்டில் தொழில்நுட்பத்தில் எங்கேயோ சென்றுகொண்டு இருக்கின்றனர்.
யார் இந்த கிரிஸ்டோபர் நோலன்:புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் (Christoper Nolan) இயக்கி, நாளை வெளியாக உள்ள ஓப்பன்ஹெய்மர் (Oppenheimer) படம். இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் யார் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அவரது படங்களே அவர் யார்? எப்படிப்பட்டவர்? என்பதை சொல்லும். டைட்டானிக் (Titanic) கதாநாயகன் லியனார்டோ டிகாப்ரியோ (Leonardo Dicaprio) நடிப்பில் வெளியான 'இன்ஷெப்சன்' (Inception), 'பேட்மென் பிகின்ஸ்' (Batman Begins) , இன்டர்ஸ்டெல்லர் (Interstellar), டன்கிரிக் (Dunkrik) போன்ற திரைப்படங்கள் மூலம் இந்தியாவில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.
தான் இயக்கிய 'டென்னட்' (Tenet) என்ற படத்தின் ஒரு பகுதி படப்பிடிப்பை மும்பையில் எடுத்தார். இப்படி தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் தனது அடுத்த படத்தை ஒரு பயோபிக்காக எடுத்துள்ளார். அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படும் அமெரிக்க விஞ்ஞானி ஜெ. ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் (J. Robert Oppenheimer) என்பவரின் வாழ்க்கை மற்றும் உலகப்போரின் போது உருவாக்கப்பட்ட உலகின் முதல் அணுகுண்டை பற்றி படமாக ஓப்பன்ஹெய்மர் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
கிராபிக்ஸை விரும்பாத நோலன்:பெரும்பாலும் தனது படங்களில் கிராபிக்ஸ் காட்சிகளை விரும்பாத நோலன் இப்படத்தை எப்படி எடுத்திருப்பார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்தில் அணுகுண்டு வெடிக்கும் ஒரு காட்சி இருப்பதாகவும், அதற்காக உண்மையில் குண்டு ஒன்றை வெடிக்க வைத்து படம்பிடித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் கிறிஸ்டோபர் நோலன் (Christopher Nolan), தனது திரைப்படங்களை IMAX-ன் பிரத்யேக கேமராவின் மூலம் படம் பிடிப்பார். அதேபோல் இந்த படமும் IMAX-ன் கேமரா மூலம் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அசல் அனுபவம் வேண்டுமெனில் IMAX திரையரங்குகளில் பார்க்க வேண்டுமென நோலனின் ரசிகர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த மாதம் 21ஆம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ள இந்த திரைப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய இந்திய மொழிகளிலும் வெளியாக உள்ளது.