சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டையில், ரப்பர் பெல்ட் குடோன் தீப்பிடித்து எரிந்ததில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமானது.
அம்பத்தூர் தொழிற்பேட்டை, மண்ணூர்பேட்டை, பிள்ளையார் கோவில் தெருவில் எந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் ரப்பர் பெல்ட் குடோன் உள்ளது. இதன் உரிமையாளர் சேது (53). இவர், ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று (ஜூலை 2) மாலை சேதுவின் குடோனில் கரும்புகை வெளியேறியது. பின்னர், ரப்பர் பெல்ட் மளமளவென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த ஊழியர்கள், ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால், அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.
இதனையடுத்து, அங்கு தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இது குறித்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஜெ.ஜெ. நகர் ஆகிய இடங்களில் இருந்து 3 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தனர். இதன் பிறகு, அங்கு 15-க்கும் மேற்பட்ட வீரர்கள் தண்ணீர் பீச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர்.