தமிழ்நாடு சட்டப்பேரவையில், கோவிட் - 19 வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பில் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ”கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே காணொலி காட்சி மூலமாக நடந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
கோவிட் - 19 வைரஸ் பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவையொட்டிய மாவட்டமாக கன்னியாகுமரி இருப்பதால், ஆட்சியருக்கு தேவையான கூடுதல் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் இல்லாத நிலையை உருவாக்க தமிழ்நாடு அரசு ஒதுக்கிய 60 கோடி ரூபாய் நிதியின் மூலம் பேருந்து நிலையங்கள், அங்கன்வாடிகள் என அனைத்து இடங்களையும் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, எல்லையோர 16 மாவட்டங்களில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு செய்ய அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் , சுகாதாரத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
கேரள எல்லை மாவட்டமாக இருப்பதால் குமரி ஆட்சியருக்கு மீது கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது! உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பாதிப்பால் இதுவரை 156 நாடுகளைச் சேர்ந்த இரண்டு லட்சத்து 45 ஆயிரத்து 629 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்து 48 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவிலிருந்து பரவத்தொடங்கிய இந்தக் கொடிய வைரசால் இந்தியாவில் 194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நாட்டு மக்களை காக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுவருகின்றன. இருப்பினும், அதன் தாக்கம் நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
இதையும் படிங்க :பகல், இரவு பாராமல் செயல்படும் பார்கள்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை!