கோவையைச் சேர்ந்த பூமிராஜ் என்பவர் தொடர்ந்துள்ள பொதுநல மனுவில், ”கடந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் கரோனா பரவல் தொடங்கிய நிலையிலிருந்து, கிருமி நாசினி தெளித்து தொற்று பரவாமல் தமிழ்நாடு சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்தது. சிறிய அளவிலான தெளிப்பான், தீயணைப்பு வாகனம், ராட்சத கிரேன், டிரோன் கேமிரா ஆகியவற்றின் மூலம் மருத்துவமனை வளாகங்கள்,சாலை சந்திப்புகள், கோயம்பேடு வணிக வளாகம், நடைபாதை உள்ளிட்ட மக்கள் நடமாடும் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கரோனா பரவல் சற்றே குறைந்து தற்போது இரண்டாவது அலை தொடங்கியுள்ள நிலையில், கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கைகளை கடந்த மார்ச் மாதம் முதல் அரசு தொடங்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, சோடியம் ஹைட்ரோ குளோரைடு கரைசலை கிருமி நாசினியாக பயன்படுத்தலாம் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல் உள்ளதால், அதை பின்பற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டுமென வாதிட்டார்.