சென்னை: NEET coaching classes: பாமக நிறுவனரும், மருத்துவருமான ராமதாஸ் இன்று (டிச.28) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாட்டில் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறப்படுமா என்பது இன்னும் தெளிவாகாத நிலையில், நீட் தேர்வு நடைபெற்றால், அதை அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்வதற்கான பயிற்சி வகுப்புகள் இதுவரை தொடங்கப்படவில்லை.
மற்றொருபுறம் இதுகுறித்து தெரிவிக்கப்படும் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் மருத்துவக் கல்வி கனவில் இருக்கும் மாணவர்களிடம் குழப்பத்தையும், மன உளைச்சலையும் அதிகரித்துள்ளன. தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அச்சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டால், தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு தேவையிருக்காது. ஆனால், தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதலே கிடைக்காத நிலையில், அடுத்த கல்வியாண்டில் நீட் விலக்கு சாத்தியமாகுமா என்பது மாணவர்கள் மத்தியில் கவலை தரும் வினாவாக எழுந்திருக்கிறது.
முன்னுக்குப்பின் முரணான தகவல்கள்
நீட் விலக்கு கிடைக்குமா, இல்லை கிடைக்காதா என்பது இன்னும் தெளிவாகாத நிலையில், எந்த சூழலையும் எதிர்கொள்ள வசதியாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வை எதிர்கொள்வதற்கான பயிற்சி அளிக்கப்படுவது தான் சரியானதாக இருக்கும். தமிழ்நாடு அரசும் இதைத் தான் கொள்கை முடிவாக அறிவித்திருக்கிறது. ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. அடுத்த கல்வியாண்டுக்கான நீட் தேர்வுக்கு இன்னும் 6 மாதங்களுக்கும் குறைவான நாட்களே இருக்கும் நிலையில், இதுவரை பயிற்சியைத் தொடங்காதது சரியல்ல.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், மருத்துவத்துறை அமைச்சரும் தெரிவித்துள்ள கருத்துகள் முரணாக உள்ளன.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ’தமிழ்நாட்டில் நடப்பாண்டு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நிறைவடைந்த பிறகு, நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை அரசு தொடங்கும்’ என்று கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘தமிழ்நாட்டில் நீட் பயிற்சி வகுப்புகள் ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன’ என்று கூறியுள்ளார். இது குழப்பங்களை அதிகரித்திருக்கிறது.
100 நாட்கள் தான் இருக்கும்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி இன்னும் தொடங்கப்படவில்லை என்பது தான் உண்மை. தமிழ்நாடு அரசின் சார்பில் நீட், ஐஐடி மாணவர் சேர்க்கைக்கான கூட்டு நுழைவுத்தேர்வு ஆகியவற்றுக்கு நேரடி வகுப்புகள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் ஒரு மாவட்டத்திற்கு 80 மாணவர்களுக்கு மட்டும் தான் வாய்ப்பளிக்கப்படும். இப்போது 12 மாவட்டங்களைச் சேர்ந்த 960 மாணவர்களுக்கு மட்டும் தான் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவும் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகளும் ஒன்று அல்ல. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி இன்னும் தொடங்கப்படவில்லை.