தமிழ்நாட்டிலுள்ள இரண்டு பொதுத்துறை, 9 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய 123 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல் நீண்ட நாட்களாக இழுத்தடித்து வந்தது.
இதுகுறித்து தொடர்போராட்டம் நடத்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று சர்க்கரை ஆலைகளின் ஆணையர் கரும்பு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகை வழங்கப்படும் என அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டும் இன்றுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில், 2018- 19 ஆம் ஆண்டிற்காக நிலுவைத் தொகையான 123 கோடி ரூபாயை வழங்க சர்க்கரை ஆலை அலுவலர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக கரும்பு விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த தொகை வரும் ஆக்டோபர் 21 ஆம் தேதிக்குள் வழங்கப்பட்டுவிடும் என்றும் தமிழக கரும்பு விவசாயிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.