சென்னை: கிண்டி மடுவாங்கரையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு, குடிநீர் பாதுகாப்பு வாரத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
"நாட்டிலேயே மழைநீர் சேகரிப்புத் திட்டம் முன்னோடித் திட்டமாகத் தமிழ்நாட்டில் செயல்பட்டுவருகிறது. சைதாப்பேட்டையில் மட்டும் 148 இடங்களில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 25 நீர்நிலைகளில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுவருகிறது.
சென்னையில் 10.94 குடியிருப்புகள் உள்ளன. அதில் எட்டு லட்சத்து 24 ஆயிரம் குடியிருப்புகளுக்கு தனித்தனியே குடிநீர் இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள இரண்டு லட்சம் குடியிருப்புகளுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் தனித்தனியே குடிநீர் இணைப்புகள் தரப்பட உள்ளன. வருங்காலத்தில் தண்ணீர்ப் பிரச்சினையே இல்லாத இடமாக சென்னை மாறும்.
திருமுல்லைவாயில் பகுதியில் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். 10 ஆண்டுகளாகச் செயல்படாமல் இருக்கக்கூடிய தண்ணீர்த் தொட்டிகள் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிகள் திறந்ததால் பாதிப்புகள் இல்லை
செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறந்தவுடன்தான் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டது என்பது தவறான கருத்து. அவர்களுக்கு முன்பே அறிகுறிகள் இருந்ததால்தான் தற்போது தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதிசெய்யப்பட்டது மகிழ்ச்சியான விஷயம்தான்.
அவர்களுக்குச் சிகிச்சை தொடர்ந்து வழங்கப்பட்டுவருகிறது. இது பரவாமல் தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. கோவை மாவட்டம் கேரளா எல்லைப் பகுதியில் இருப்பதால் தொற்று அதிகரித்துள்ளது.
கேரள எல்லையை ஒட்டி இருக்கக் கூடிய ஒன்பது மாவட்டங்களில் தொற்று அதிகரித்துவருகிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து கேரளாவுக்கு அருகேயுள்ள ஒன்பது மாவட்டங்களில் 100 விழுக்காடு தடுப்பூசி போட கூடுதலாகத் தடுப்பூசி வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்.
கூடுதல் தடுப்பூசிகள்
ஒன்பது மாவட்டங்களில் கூடுதலாகத் தடுப்பூசி போடுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதாரத் துறை எடுத்துவருகிறது. அதேபோல, கேரளாவிலும் மிகச் சிறப்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஆனாலும், ஒரு நாளைக்கு 30 ஆயிரத்திற்கும் மேல் எண்ணிக்கை குறையாமல் இருந்துவருகிறது.
தமிழ்நாட்டில் தசை சிதைவு போன்ற நோயினால் ஏழு குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களுக்கு அமெரிக்காவிலிருந்து மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளிப்பதற்கு 16 கோடி ரூபாய் செலவாகும் என்று கூறுகிறார்கள். ஆனால் அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. அவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டுமோ அதற்கான உரிய சிகிச்சை அளிக்கப்படும்.
இந்தியாவில் எந்த இடத்திலும் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கவில்லை. கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் 17 வயது 18 வயதிற்குள் உள்ளவர்களுக்குத் தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசிடம் பேசியிருக்கிறோம். அது குறித்த ஆய்வு நடத்தப்பட்டுவருகிறது எனக் கூறியுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க :உயர் நீதிமன்ற 4 நீதிபதி பணியிடங்கள் - கொலிஜியம் பரிந்துரை நால்வர் யார்?