சென்னை: பொறியியல் படிப்பில் 2021-22ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு நான்கு சுற்றுகளாக செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து துணைக் கலந்தாய்வு அக்டோபர் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றது.
கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு உரிய கால அவகாசம் வழங்கப்பட்டன. 440 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் 95 ஆயிரத்து 336 மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டு படிப்பு, கல்லூரிகளை தேர்வு செய்தனர். இவர்களில் 86 ஆயிரத்து 433 மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
2ஆம் கட்ட கலந்தாய்வு ரத்து
முன்னதாக உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் நவர்பர் 25ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், "தொழில்நுட்ப கல்வி இயக்குநர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை 2021- 22 கல்வியாண்டில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கும், மாணவர்கள் சேராமல் உள்ள இடங்களை நிரப்புவதற்கு 2ஆம் கட்ட கலந்தாய்வு நடத்துவதற்கு அரசிடம் அனுமதி கேட்டுள்ளார். அதனடிப்படையில் முதல்முறையாக பொறியியல் படிப்புகளில் சேர 2ஆம் கட்ட கலந்தாய்வு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது" எனத் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் பொறியியல் படிப்பில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு நடத்துவதற்கான காலக்கெடு நவம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதாக அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கழகம் தெரிவித்துள்ளது. மேலும் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது போன்ற காரணங்களால் நடப்பு கல்வியாண்டில் 2ஆம் கட்ட கலந்தாய்வு நடத்துவதில்லை என உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: School education: இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்தவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையில் கட்டாயப் பணியிட மாறுதல்