சென்னை:பிஇ,பிடெக் பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று (செப்.27) தொடங்கி அக்டோபர் 17ஆம் தேதி வரையில் நான்கு சுற்றுகளாக ஆன்லைன் மூலம் நடைபெறவிருக்கிறது.
முதல் சுற்று கலந்தாய்வில் பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள் இன்றும், நாளையும் கலந்தாய்விற்கான கட்டணத் தொகை 5,000 ரூபாயை செலுத்தலாம்.
பொறியியல் படிப்பில் பிஇ, பிடெக் பாடப்பிரிவில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 1 லட்சத்து 74 ஆயிரத்து 490 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு இந்த ஆண்டு விண்ணப்பித்தனர். அதில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 45 மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தினர்.
தர வரிசைப் பட்டியல்
அதனைத் தொடர்ந்து தகுதியான 1 லட்சத்து 39 ஆயிரத்து 33 மாணவர்களுக்கு தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இவர்களில் பொதுப்பிரிவு மாணவர்கள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 973 பேருக்கான கலந்தாய்வு அட்டவணையை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
நான்கு சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்விற்கான பணம் செலுத்துவதற்கு இரண்டு நாட்களும், கல்லூரிகளை தேர்வு செய்ய இரண்டு நாட்களும், தற்காலிக ஒதுக்கீடு உத்தரவினை உறுதி செய்ய இரண்டு நாளும், இறுதி ஒதுக்கீடு உத்தரவினை உறுதி செய்ய ஒரு நாளும், ஒவ்வொரு சுற்றுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.