சென்னை:பி.இ., பி.டெக் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு நான்கு சுற்றுகளாக நடைபெற்று இன்று (அக்.17) முடிவடைந்துள்ளது.
இந்தாண்டு கம்பியூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவை அதிகளவில் மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். அடுத்ததாக மெக்கானிக்கல் பாடப்பிரிவு, சிவில் பாடப்பிரிவினை குறைவான மாணவர்களே தேர்வு செய்துள்ளனர்.
கல்வி ஆலோசகர் அஸ்வின் இதுகுறித்து கூறுகையில், "பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று முடிவடைந்துள்ளது. இந்த கலந்தாய்வின் மூலம் 59.13 விழுக்காடு இடங்கள் நிரம்பியுள்ளன. கடந்தாண்டு நான்கு சுற்று கலந்தாய்வு முடிவின் போது 44.06 விழுக்காடு இடங்கள் நிரம்பி இருந்தன.
7 கல்லூரிகளை ஒருவர் கூட தேர்வு செய்யவில்லை
கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் 15 விழுக்காடு இடங்கள் கூடுதலாக நிரம்பியுள்ளன. கடந்தாண்டு 16 பொறியியல் கல்லூரிகளில் ஒரு இடத்தைக் கூட மாணவர்கள் தேர்வு செய்யவில்லை. ஆனால், நடப்பாண்டில் ஏழு கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை.
நடப்பாண்டில் பொறியியல் படிப்பில் மாணவர்களுக்கு ஈர்ப்பு அதிகளவில் இருக்கக் காரணம் கம்பியூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவின் மீது உள்ள மோகம் தான். பொறியியல் படிப்பில் இடங்களை தேர்வுசெய்த 80 ஆயிரத்து 353 மாணவர்களில் 32 ஆயிரத்து 284 மாணவர்கள் கம்பியூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவினை தேர்வு செய்துள்ளனர்.
அதற்கு அடுத்ததாக இசிஇ (ECE) பாடப்பிரிவையும், மூன்றாவதாக மெக்கானிக்கல், EEE பாடப்பிரிவையும், கடைசியாக சிவில் இன்ஜினியரிங் படிப்பையும் மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்" எனக் கூறினார்.