வேலூர்:தமிழ்நாட்டில் நடப்புக்கல்வி ஆண்டில் கல்வி பயிலாத சுமார் 5 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுக் கல்வியை வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
காட்பாடியில் நேற்று (11.10.2022) மாலை பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில்,
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை மாநிலப்பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அமைச்சர், ”தமிழ்நாட்டில் நடப்புக்கல்வி ஆண்டில் சுமார் 5 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுக்கல்வியை வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவுத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 9 கோடியே 83 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத்தெரியாத அனைவரையும் கண்டறிந்தும், பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் உதவியுடன் முற்றிலும் எழுத மற்றும் படிக்கத்தெரியாத பெற்றோர்கள், உறவினர்களைக்கண்டறிந்தும் அவர்களுக்கு கல்வி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் குடியிருப்புப்பகுதியில் உள்ள எழுதப்படிக்கத்தெரியாத கண்டறிந்து அவர்களுக்கு கல்வி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகள், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் எழுதப் படிக்கத் தெரியாதவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு கல்வி அறிவு புகுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.