தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவர்களுக்குத் துரோகம் செய்யும் அதிமுக; மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் - மு.க.ஸ்டாலின்

MK Stalin announces massive protest
MK Stalin announces massive protest

By

Published : Oct 22, 2020, 8:21 PM IST

Updated : Oct 23, 2020, 7:12 AM IST

20:11 October 22

சென்னை: மாணவர்களுக்குத் துரோகம் செய்யும் எடப்பாடி அதிமுக அரசைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நீட் தேர்வு முடிவுகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு அனுமதி தரவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் வாயிலாக பதிலளித்த ஆளுநர், இது தொடர்பாக முடிவெடுக்க மூன்று முதல் நான்கு வார காலம் அவகாசம் தேவைப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக இவ்விவகாரத்தில் ஐந்து அமைச்சர்கள் தன்னை சந்தித்தபோதும் இதே தகவலை தெரிவித்ததாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தகவல் கூறியுள்ளார்.  இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அதில் கூறியதாவது;

மருத்துவக் கல்வியில் தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவிகித முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை, சட்டமன்றத்தில் முன்னுரிமை அடிப்படையில், அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒருமனதாக 15.9.2020 அன்று நிறைவேற்றி,  மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களுக்கு அனுப்பியும், அவர் அந்த மசோதாவிற்கு இதுவரை ஒப்புதல் அளிக்க முன்வரவில்லை.  

அவசர, அவசியத் தன்மையினைப் புறக்கணித்திடும் இந்த அணுகுமுறை, சமூகநீதிக்கும், ஜனநாயகத்தின் மகேசர்களான வெகுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை மாண்புகளுக்கும், மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. ஒரு மாதத்திற்கும் மேல் இந்த மசோதா மீது எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் இருப்பதால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள “நீட்”  தேர்வில் வெற்றி பெற்றுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள், மருத்துவக் கல்வியை நினைத்துப் பார்க்க  முடியாத நெருக்கடியை மத்திய பாஜக அரசின் அறிவுரையின் பேரில் தமிழ்நாடு ஆளுநரும் இதை ஆணித்தரமாக எதிர்த்துப் பேச முடியாமல், உள்நோக்கத்துடன் எப்போதும் அடங்கிப் போகும்  முதலமைச்சர் பழனிசாமியும் ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் திமுக சார்பில் தமிழ்நாடு ஆளுநருக்கு நேற்று (அக். 21)  கடிதம் எழுதி, “முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் வழங்குங்கள்” என்று பெரிதும் வலியுறுத்தினேன்; திமுக சார்பில் எழுதிய எனது கடிதத்திற்கு இன்று(அக்.22) பதிலளித்துள்ள தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், “நீட் முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு மசோதா குறித்து அனைத்துக் கோணங்களிலும் கலந்தாலோசனை நடத்தி வருகிறேன். இது குறித்து முடிவு எடுக்க எனக்கு 3 அல்லது 4 வாரங்கள் தேவைப்படுகிறது” என்று தெரிவித்திருக்கிறார். 

ஏற்கனவே ஒருமாத காலம் அவகாசம் முடிந்துவிட்ட நிலையில் - குறைந்தபட்சம் மேலும் ஒரு மாதம் என்பது 7.5 சதவிகித முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நீர்த்துப் போக வைப்பதாகும். அரசுப் பள்ளிகளில் பயிலும்  ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலனுக்கு முற்றிலும் எதிரானதாகும்.

அதே கடிதத்தில், “மூன்று அல்லது நான்கு வாரங்கள் தேவை என்பதைத் தன்னைச் சந்தித்த தமிழ்நாடு அமைச்சர்கள் குழுவிடமும் தெரிவித்திருக்கிறேன்” என்றும் ஆளுநர் கூறியுள்ளார். ஆனால் ஆளுநரைச் சந்தித்த பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அமைச்சர்கள் குழு, “கால அவகாசம் வேண்டும்” என்று ஆளுநர் சொன்னதையே தமிழ்நாடு மக்களிடமிருந்து திட்டமிட்டு மறைத்து விட்டார்கள். 

இது ஒருபுறமிருக்க, “பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துங்கள். இந்த மசோதாவிற்கு ஒப்புதல் தருகிறேன்” என்று ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு அமைச்சர்களிடம் சொன்னதாகவும் ஒரு செய்தி வலம் வருகிறது. சமூக நீதியைச் சீர்குலைக்கும் அப்படியொரு கருத்து, அந்த சந்திப்பில் முன் வைக்கப்பட்டதா? என்பதை அமைச்சர்கள் குழு உடனடியாக  தமிழ்நாடு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த 7.5 விழுக்காடு முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் பெற அதிமுக-வுடன் இணைந்து போராடத் தயார் என்றும், அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசித்து முதலமைச்சர் என்ன வகையான போராட்டம், எந்தத் தேதியில் போராட்டம் என்பதை அறிவிக்க வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தேன். ஆனால் ஆளுநர் சொன்னதை மறைத்தது மட்டுமின்றி, அப்படியொரு போராட்டத்தை நடத்துவதற்கும் இதுவரை முதலமைச்சர் பழனிசாமி முன்வரவில்லை.  

எதை எதையோ பற்றி வாய் திறந்துவரும் முதலமைச்சர், இது குறித்து ஏன் இப்படி மவுனம் சாதிக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம். மேலும் கல்பாறையை ஒத்த அவரது அமைதி, மத்திய பாஜக அரசை எதிர்த்து அந்த அரசின் கண் அசைவின்படி அரசுப் பள்ளி மாணவர்களின் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்காமல் காலம் தாழ்த்தும் ஆளுநரை எதிர்த்து போராடுவதற்கு முதலமைச்சர் பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை என்பதையே காட்டுகிறது. அக்.16 அன்றே நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டது.  

கல்லூரிகளில் மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான “கட் ஆப்” தேதியை மத்திய அரசே நிர்ணயிப்பதால் ஆளுநர் கோரும் ஒரு மாத கால அவகாசம் வரை மாநில அரசால் மருத்துவக் கல்லூரிகளில் கலந்தாய்வு நடத்தாமல், மாணவர்கள் சேர்க்கையை அனுமதிக்காமல் இருக்க முடியுமா என்பது “பெருத்த  ஐயப்பாட்டுக்குரிய கேள்வி”யாக இருக்கிறது.

ஆகவே அதிமுக அரசின் ஒத்துழையாமையைப் பற்றியும், அக்கறையற்ற போக்கைப் பற்றியும் மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் தமிழ்நாடு மாணவர்களின் நலனையும், சட்டப்பேரவையில் மாண்பினையும் பாதுகாக்கும் போராட்டத்தில் திமுக நேரடியாகக்  களத்தில் இறங்க வேண்டிய தருணம், தவிர்க்க முடியாமல் வந்துவிட்டது.  

நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு இனியும் கால அவகாசம் கோராமல், உடனே தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கோரியும்,  தமிழ்நாடு ஆளுநருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கத் தவறி, மாணவர்களுக்குத்  துரோகம் செய்யும் எடப்பாடி அதிமுக அரசைக் கண்டித்தும் அக். 24 தேதியன்று(நாளை) காலை 10.00 மணி அளவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்தப்படும். என தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: ”நாடே வியக்கும் அளவிற்கு ஒரு அறிவிப்பு வரும்” - அமைச்சர் செங்கோட்டையன்

Last Updated : Oct 23, 2020, 7:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details