தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது? - சுபஸ்ரீ உயிரிழப்பு விவகாரத்தில் கோபமான நீதிபதிகள்! - பேனர்கள்

சென்னை : அனுமதி இல்லாமல் பேனர் வைத்தது குறித்து நீதிபதிகள் சத்யநாராணன், சேஷசாயி அமர்வு, அதிகாரிகள் ஏன் பேனர் விவகாரத்தில் அக்கறை இல்லாமல் இருக்கிறீர்கள்? இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது? என்று சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.

உயிரிழந்த சுபஸ்ரீ குறித்துவ் வழக்கு விசாரணை

By

Published : Sep 13, 2019, 5:37 PM IST

சாலையோரங்களில் பேனர்கள் வைக்கமாட்டோம் என்ற அரசியல் கட்சியினர் முன்னரே அறிவித்திருந்தால் சுபஸ்ரீயின் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. அனுமதி இல்லாமல் பேனர் வைக்கக்கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தலைமைச் செயலாளர் மீது சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கேள்வி எழுப்பிய நீதிபதிகள் சத்யநாராணன், சேஷசாயி அமர்வு, அதிகாரிகள் ஏன் பேனர் விவகாரத்தில் அக்கறை இல்லாமல் இருக்கிறீர்கள்? இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது? ஒரே இரவில் இந்த பேனர்கள் உருவாகிவிடவில்லை. பேனர் விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பிக்காத உத்தரவுகளே இல்லை. எந்த நிகழ்வு என்றாலும் பேனர் வைத்தால் தான் வருவார்களா?

பேனர் வைத்துதான் விருந்தினர்களை அழைக்க வேண்டுமா? அரசுக்கு எதிராக உத்தரவுகளை பிறப்பிக்கும் நீதிமன்றத்தால், அதை செயல்படுத்தும் தகுதி இல்லை என நினைக்கிறீர்களா? அரசோ, கட்சியோ கருணைத் தொகை கொடுக்கிறது. யாரோ ஒருவர் மீது வழக்கு பதியப்படுகிறது. மனிதனின் வாழ்விற்கு பூஜ்ய மதிப்புதான் கொடுக்கப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றும் என்பதில் அரசின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம். கடந்த டிசம்பர் முதல் சென்னையிலும், மதுரையிலும் உத்தரவுகள் பிறப்பித்தோம். இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரியவில்லை.

காஞ்சிபுரம், பூந்தமல்லி, கோயம்பேடு என அதிமுகவினர் வைத்த பேனர்கள் உள்ளிட்ட அனைத்து பேனர்கள் குறித்தும் டிராஃபிக் ராமசாமி புகைப்படங்களுடன் ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளார். அரசியல் கட்சிகள் பேனர் வைக்க தடைவிதித்தும், பதிலளிக்க உத்தரவிட்டும் யாரும் பதிலளிக்கவில்லை.

பேனர் வைக்கக் கூடாது என ஒரு அறிவிப்பு கூட செய்யவில்லை. மெரினா சாலை மீடியனில் அரசியல் கட்சி கொடி வைக்க யார் அனுமதித்தார்கள். அரசியல் கட்சிகள் கூடுதல் அரசியலமைப்பு அதிகாரம் பெற்றவர்களா?

சென்னை உயர்நீதி மன்றம்.

ஒரு குற்றம் நடக்க அனுமதிக்கிறீர்கள் பின்னர் குற்றவாளியின் பின்னால் ஓடுகிறீகள். விதிமீறல் பேனர் வைக்கும்போது உங்க அதிகாரிகள் ஏன் தடுக்கவில்லை. அதிகாரிகள் அப்போது எங்கிருந்தார்கள். விதிமீறல் பேனர்கள் வைக்கக்கூடாது எனவும், வைக்க மாட்டோம் எனவும் முதலமைச்சர் அறிக்கை விடலாமே? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

அதன்படி, பரங்கிமலை காவல் துணை ஆணையர் பிராபகர், பள்ளிக்கரணை காவல் உதவி ஆணையர் சவுரிநாதன், சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர் ஆல்பி வர்கீஸ் ஆகியோர் ஆஜராகினர்.

அப்போது நீதிபதிகள், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், அத்தொகையை பேனர் வைத்தவர்களிடம் இருந்தும் வசூலித்துக் கொள்ளலாம்.

விசாரணை குறித்த அறிக்கையை பரங்கிமலை காவல் துறை, மாநகராட்சி ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும். காவல் துறையின் விசாரணையை, காவல் துறை ஆணையர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்த வழக்கை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றுகூறி, வழக்கு விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details