சென்னை:தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை ஒட்டி இரண்டாயிரத்து 500 ரூபாய், அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வழங்கப்பட்ட டோக்கன்களில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது எனவும் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது தமிழ்நாடு அரசுத் தரப்பில், இரு மாவட்டங்களில் மட்டும் ஆர்வ மிகுதியால் கட்சியினர் இதுபோல அச்சிட்டு விட்டதாகவும், அனைத்து இடங்களிலும் அதிகாரப்பூர்மாக வழங்கப்படும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கவேண்டும் என, சுற்றறிக்கை பிறப்பிப்பதாகவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சுற்றறிக்கையும் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில், நேற்று (ஜன. 04) விசாரணைக்கு வந்த போது, அரசுத்தரப்பில் உத்தரவாதத்தை பதிவு செய்து, டோக்கன்களில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெறக் கூடாது என உத்தரவிட்டது.