தமிழ்நாடு முழுவதும் அனுமதி இல்லாமல் பேனர் வைக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை என தலைமை செயலாளர் மீது சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அனைத்து கட்சிகளையும் வழக்கில் சேர்த்து பதிலளிக்க உத்தரவிட்டிருந்த நிலையில் பள்ளிக்கரனையில் பேனர் விழுந்ததால் உயிரிழந்த சுபஶ்ரீ விவகாரத்தை விசாரித்த நீதிமன்றம், அரசியல் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
இந்நிலையில், நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், கட்சி நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அனுமதி இல்லாமல் பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்கக்கூடாது என கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவது மட்டுமல்லாமல் பிற கட்சியினர் சட்ட விரோதமாக வைத்த பேனர்களை அகற்றக்கோரி திமுக உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது. நீதிமன்ற உத்தரவை திமுக முழுமையாக அமல்படுத்தி வருகிறது. 2017 ஜனவரியில் கட்சியின் செயல் தலைவராக இருந்த ஸ்டாலின் பேனர்கள், பதாகைகள், தலைவர்களை வரவேற்பதற்கான நீண்ட வளைவுகளை வைக்கக்கூடாது என கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதனால் பேனர் வழக்கில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுடன் திமுக பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.