சென்னையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் வைத்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்து 15 நாட்கள் ஆகின்றன. ஆனால், பேனரை வைத்த ஜெயகோபால் கைது செய்யப்படாமல் இருந்தார். இதையடுத்து, காவல் துறைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியது. அதனைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் ஜெயகோபாலை சிபிசிஐடி காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். பின்னர், அங்கிருந்து சென்னை அழைத்து வரப்பட்ட ஜெயகோபால், இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பேனரை வைத்த பழனி, லட்சுமி காந்த், சுப்பிரமணி, சங்கர் ஆகிய நான்கு பேர் கூடுதலாக கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், அவர்கள் மீதான வழக்கை விசாரித்த ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நால்வரும் வெறும் கூலி தொழிலாளர்கள் மட்டுமே என்றும், நீதிமன்றம் சிறையில் அவர்களை அடைக்க முடியாது எனவும் மறுப்பு தெரிவித்தார்.