சென்னை விமான நிலையத்திற்கு வந்த சரக்கு விமானத்தின் பார்சல்களைச் சுங்கத் துறையினர் ஆய்வுசெய்தனர். நெதா்லாந்து நாட்டிலிருந்து ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஒரு முகவரிக்கு பார்சல் வந்திருந்தது. அதனுள் விளையாட்டு பொம்மைகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் சுங்கத் துறைக்குச் சந்தேகம் ஏற்பட்டது. பாா்சலைப் பிரித்துப் பாா்த்தபோது, அதனுள் மெத்தோ பெட்டமின் என்ற ஒருவகை போதை மாத்திரைகள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
மொத்தம் 450 கிராம் எடையுடைய 400 போதை மாத்திரைகள் பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் இருந்தன. இந்த மாத்திரைகளின் சர்வதேச மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும்.
இதையடுத்து, போதை மாத்திரைகளைப் பறிமுதல்செய்த சுங்கத் துறையினர், வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தினர்.
இந்தப் பாா்சலை ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரம் ஊரைச் சேர்ந்த ஒருவா் இணையதளம் மூலமாகப் பதிவுசெய்து வரவழைத்தது தெரியவந்தது.
இதையடுத்து சுங்கத் துறையின் தனிப்படை அலுவலர்கள் ஆந்திரா சென்று பார்சலில் உள்ள முகவரியில் விசாரணை நடத்தினர். அங்கு 27 வயதுடைய பொறியியல் கல்லூரி மாணவன்தான் இந்த போதை மாத்திரைகளை வரவழைத்துள்ளது தெரியவந்தது.
மேலும், இளம் வயதில் போதைக்கு அடிமையாகி, கல்லூரி படிப்பையும் பாதியில் நிறுத்திவிட்டதும் தெரிந்தது. அதோடு அவர் தடைசெய்யப்பட்ட இணையதளத்தைப் பயன்படுத்தி இந்தப் போதை மாத்திரைகளை வரவழைத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சுங்கத் துறையினர் அந்த நபரைக் கைதுசெய்து சென்னை விமான நிலைய சுங்கத் துறை அலுவலகம் அழைத்துவந்தனர்.
அதன்பின்பு அந்த மாணவன் மீது போதை மாத்திரைகளைச் சட்டவிரோதமாக வரவழைத்தது, தடைசெய்யப்பட்ட இணையதளத்தை பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.