சென்னை: போரூர் மங்கலம் நகரை சேர்ந்தவர் வாணி கபிலன் (57). இவர் கே.கே நகர் லட்சுமணசாமி சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் தமிழ் எழுத்தாளரும் கூட, பல்வேறு கவிதை தொகுப்பு புத்தகங்களை எழுதி உள்ளார்.
இந்நிலையில் இன்று(ஜூன் 24) மாலை பணி முடிந்தவுடன் தனது காரில் பின்புறத்தில் அமர்ந்துகொண்டு தங்கையான எழிலரசியுடன் வீட்டிற்கு பயணம் செய்துள்ளார். கார் கே.கே நகர் லட்சுமண சாலையில் இருந்து பி.டி.ராஜன் சாலை வழியாக கர்நாடக வங்கி அருகே வந்த போது திடீரென அங்கிருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து காரின் பின்பக்கம் விழுந்தது.
இதில் பின்பக்கத்தில் அமர்ந்திருந்த வங்கி மேலாளர் வாணி கபிலன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தங்கை எழிலரசி மற்றும் கார் ஓட்டுனர் கார்த்திக் காயத்துடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்து அசோக் நகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் வந்து மரத்தை அப்புறப்படுத்தினர்.