நாட்டில் உள்ள 10 வங்கிகளை நான்காக இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்குப் பல்வேறு வங்கி சங்கத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக, கடந்த மாதம் மூன்று வங்கி அலுவலர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இருப்பினும் இந்த விவகாரத்தில் உரிய முடிவு எடுப்பதாக மத்திய நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் உறுதியளித்ததையடுத்து அந்தப் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், வங்கிகள் இணைப்பு, வங்கித்துறை சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA) மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு (BEFI) ஆகிய இரண்டு சங்கங்கள் நாளை வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தவுள்ளனர். வங்கிகள் இணைப்பு நடவடிக்கையால் வங்கி சேவைகள் குறையும், சிறு, குறு நிறுவனங்களுக்குக் கடன் சேவை அளிக்கப்படுவது குறையும், வங்கியில் புதிய வேலைவாய்ப்புகள் பறிபோகும் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.