சென்னை:சென்னையில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற வங்கதேசத்தை சேர்ந்த இளைஞர் சென்னை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். சென்னையில் இருந்து இலங்கை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று மாலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது.
அந்த விமானத்தில், பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து, பயணிகளை விமானத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இலங்கைக்கு செல்ல விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவருடைய பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அது இந்திய பாஸ்போர்ட் என பதிவிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த இளைஞர் பார்ப்பதற்கு இந்தியரைப் போல இல்லாததால் சந்தேகமடைந்த குடியுரிமை அதிகாரிகள் இளைஞரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் பாஸ்போர்ட்டை கம்ப்யூட்டர் மூலம் சோதனை செய்ததில், அது போலி பாஸ்போர்ட் என தெரியவந்துள்ளது. இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் இளைஞரின் பாஸ்போர்ட்டை ரத்து செய்தனர். இதைத்தொடர்ந்து, இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் எனவும் சாலை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி மேற்குவங்கம் மாநிலத்திற்கு வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.