சென்னை:துபாயில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று (அக்.18) அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது மேற்குவங்க மாநில முகவரியுடன் இந்திய பாஸ்போர்ட்டில் ஜொஹெல் ஷில் (24) என்ற இளைஞர் ஒருவர் துபாயிலிருந்து சென்னை வந்திருந்தார்.
அந்த இளைஞரின் பாஸ்போர்ட் மீது குடியுரிமை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதையடுத்து அவருடைய பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது, அவருடைய பாஸ்போர்ட் போலியான பாஸ்போர்ட் என்று தெரியவந்தது.
உடனடியாக குடியுறிமை அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்றும் அவர் மனைவி குழந்தையுடன் சட்ட விரோதமாக எல்லையை கடந்து, இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்துக்குள் ஊடுருவியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
மேற்குவங்க மாநிலத்தில் ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுத்து, போலியாக இந்தியா ஆதார் கார்டு பெற்றுள்ளனர். அதன்பிறகு, அந்த போலி ஆதார் கார்டு மூலம் ஜொஹெல் ஷில் போலி இந்திய பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து ஜொஹெல் ஷெல்லின் மனைவி மற்றும் அவரது குழந்தை தற்போது மேற்குவங்க மாநிலத்தில் இருந்து வரும் நிலையில், ஜொஹெல் ஷில் மட்டும் போலி பாஸ்போர்ட் மூலம் துபாய்க்கு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் விசாரணைக்குப் பின்னர், ஜொஹெல் ஷில்லின் போலி பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து அவரை கைது செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்த்துறையிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், இவர் இந்த போலி பாஸ்போர்ட்டை எந்த ஏஜென்டிடம், எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினார்? இவர் துபாய்க்கு எப்போது சென்றார்? துபாயில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்த காரணம் என்ன? என்று பல்வேறு கோணங்களில் காவல்த்துறையினர் இரண்டாம் கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:காணாமல் போன மனைவியை மீட்டுத் தரக்கோரி மனு.. நடவடிக்கை எடுக்காதது ஏன் என கணவர் தர்ணா!