புதுச்சேரி திருக்கனூர் சுற்றுவட்டார கிராமங்களில் மிளகாய், வெண்டை, வாழை உள்ளிட்ட காய்கறி வகைகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இங்கு பயிரிடப்படும் காய்கறிகள் பொருள்கள் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அப்பகுதியிலிருந்து வியாபாரிகள் இங்கு வந்து வாங்கி செல்வதும் வழக்கம்.
இந்நிலையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையால் தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் அரை நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதனால், வியாபாரிகள் யாரும் தோட்டத்திற்கு வரமுடியாத நிலை உருவாகியுள்ளது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.