தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்களுக்குத் தடை - உயர் நீதிமன்றம் - சர்வதேச கருத்தரங்கு விளையாட்டுக்கள்

சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்களை பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் திருத்த விதிகளுக்கு தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
chennai HIGH court

By

Published : Apr 26, 2023, 3:48 PM IST

சென்னை: திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பரிமாற வசதியாக தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் திருத்தம் செய்து, தமிழ்நாடு அரசு சிறப்பு உரிமத்தை அறிமுகப்படுத்தியது. சிறப்பு உரிமம், உரிமம் பெற்றவர் மற்றும் உரிமதாரரால் குறிப்பிடப்பட்ட இடத்தில் பொது நிகழ்ச்சிகளில் விருந்தினர்கள், பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு மதுபானம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறப்பு உரிமம் குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையால் வெளியிடப்பட்டது.

இதை எதிர்த்து வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்தார். இதுதொடர்பான மனுவில், "டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரை தற்போது கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் தான் அமைக்க வேண்டும் என விதிகள் உள்ளன. திருமணம் போன்ற நிகழ்வுகள் பெரும்பாலும் குடியிருப்புப் பகுதிகளில் நடைபெறும் என்பதால், இந்த விதிகளை அனுமதித்தால், அது பொதுமக்கள் அமைதியாக வாழும் உரிமையை பாதிக்கச் செய்யும். பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த திருத்த விதிகளுக்குத் தடை விதிக்க வேண்டும். திருத்த விதிகளை ரத்து செய்ய வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், "பொது இடங்களான திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் மதுபானம் பரிமாற வகை செய்யும் விதிகள் ரத்து செய்யப்பட்டு, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதை எதிர்த்து தான் வழக்குத் தொடர முடியும்" என வாதாடப்பட்டது.

"பொது இடங்கள் மட்டுமல்லாமல், சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் வழங்கவும் தடை விதிக்க கோரியுள்ளோம். புதிய திருத்தம் தொடர்பாக கூடுதல் மனு தாக்கல் செய்ய உள்ளோம்” என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வாதங்களை கேட்ட நீதிபதிகள், சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாறும் வகையில் உரிமம் வழங்குவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: கலாஷேத்ரா பாலியல் புகார்: சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details