தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயிர் பறிக்கும் அதிவேக சூப்பர் பைக்குகளை தடை செய்க - ராமதாஸ் - Two-wheeler adventure

இரு சக்கர வாகனங்களில் சாகசம் செய்யும் தாகத்துடன் பயணிக்கும் இளைஞர்கள் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பது அதிகரித்து வரும் நிலை தொடர்வதால், உயிர் பறிக்கும் அதிவேக சூப்பர் பைக்குகளை தடை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Ban high speed super bikes that take lives said pmk founder Ramadoss
Ban high speed super bikes that take lives said pmk founder Ramadoss

By

Published : Apr 22, 2021, 11:43 AM IST

சென்னை: உயிர் பறிக்கும் அதிவேக சூப்பர் பைக்குகளை தடை செய்ய வலியுறுத்தி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விபத்துகளைத் தடுக்க இரு சக்கர வாகனங்களிலும் வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொறுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. அதிவேக இரு சக்கர வாகனங்களில் சாகசம் செய்யும் தாகத்துடன் பயணிக்கும் இளைஞர்கள் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பது அதிகரித்து வரும் நிலையில், இது மிகவும் பயனளிக்கக் கூடியது.

பள்ளிகளின் பாடத் திட்டத்தில் சாலை விதிகளை சேர்க்க வேண்டும். அதிவிரைவுச் சாலைகளில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பயணிக்கலாம் என்ற ஆணையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். இவை அனைத்தும் இந்த தருணத்தில் மிகவும் தேவையான பரிந்துரைகள். இந்த யோசனைகளை பாமக வரவேற்கிறது.

ஒரு காலத்தில் இரு சக்கர வாகனங்களின் அதிகபட்ச வேகம் 60 கி.மீ. அவற்றின் அதிகபட்ச இழுவைத் திறன் 100 சி.சி. அவற்றில் 40 கி.மீ முதல் 50 கி.மீ வேகத்தில் தான் பயணிக்க முடியும். ஆனால், இப்போது 1340 சி.சி. திறன் வரை கொண்ட அதி நவீன சூப்பர் பைக்குகள் இந்திய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரூ.35 லட்சம் வரை விலை கொண்ட அவற்றில் மணிக்கு 400 கி.மீ வேகத்தில் கூட பறக்க முடியும். இது தான் ஆபத்தாக மாறியிருக்கிறது.

சாகசம் செய்யும் மனப்போக்கு அதிகரித்துள்ள இன்றைய இளைய தலைமுறையினருக்கு தீனிபோடும் வகையில் சூப்பர் பைக்குகள் வந்திருப்பதால் இளைஞர்கள், அவற்றை வாங்கி அதில் அதிவேகத்தில் பறக்கின்றனர். அப்போது சாலையில் எதிர்பாராத சூழல்களை சமாளிக்க முடியாமல் விபத்துக்கு உள்ளாகின்றனர். இதனால் உயிரிழந்த பலரையும் எடுத்துக்காட்டாக கூற முடியும். அவர்களது பெற்றோர்களின் துயரையும் வார்த்தைகளால் விளக்கமுடியாது.

உலகிலேயே அதிக சாலை விபத்துகள் நிகழும் நாடு இந்தியா தான். இந்தியாவில் அதிக விபத்துகள் நிகழும் மாநிலம் தமிழ்நாடு தான். கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 51,113. அவர்களில் 37 சதவீதம் அதாவது 56,136 பேர் இரு சக்கர வாகன விபத்துகளில் இறந்தவர்கள். இவர்களில் கணிசமானவர்களின் உயிரிழப்புக்குக் காரணம் சூப்பர் பைக்குகள் தான். தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 18 வயது இளைஞர் ஓட்டுநர் உரிமம் கூட பெறாமல் எல்.எல்.ஆர் எனப்படும் பழகுநர் உரிமத்தை வைத்துக் கொண்டு 1340 சி.சி பைக்குகளைக் கூட ஓட்ட முடியும். இத்தகைய அணுகுமுறை உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுகளுடன், பந்தயம் உள்ளிட்ட சில குறிப்பிட்ட தேவைகளைத் தவிர வேறு பயன்பாடுகளுக்கு அதிவேக சூப்பர் பைக்குகளை தடை செய்ய வேண்டும். தொடக்கத்தில் சாதாரண வாகனங்களை ஓட்டி அனுபவம் பெற்ற பிறகு தான் கனரக மற்றும் அதிவேக வாகனங்களை இயக்க அனுமதிக்கும் வகையில் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான விதிகளை மாற்றியமைக்க வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு இத்தகைய இரு சக்கர வாகனங்களை வாங்கித் தராமல், மிதிவண்டிகளில் பயணம் செய்யும்படி ஊக்குவிக்க வேண்டும்" என வலியுறுத்துவதாக கூறுயுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details