தற்போது, உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் பெருந்தொற்று இந்தியா முழுவதும் கடந்த 20 நாள்களாக தீவிரமடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் அதன் தாக்கம் இரண்டாம் கட்டத்தை அடைந்துள்ளது. வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மூங்கில் கைவினைப் பொருள்கள் விற்பனை 144 தடை உத்தரவு காரணமாக பல தொழில்கள் முடங்கிப்போய் உள்ளன. தொழிற்சாலைகள், ஆலைகள் தொடங்கி சிறு குறு வணிக நிறுவனங்கள் என அனைத்து விதமான தொழில்களும் பாதிப்படைந்துள்ளன. அதிலும் குறிப்பாக தினக்கூலி வேலை செய்பவர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இந்த ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தொழில்களில் மூங்கில் கைவினைப் பொருள் உற்பத்தியும் ஒன்று.
சென்னை வால்டாக்ஸ் சாலை ஓரத்தில் மூங்கிலால் செய்யப்படும் கூடை, பாய், முரம், மூங்கில் தட்டி போன்றவை விற்பனை செய்கின்றனர். இங்கு 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த மூங்கில் பொருள் உற்பத்தி தொழிலை செய்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பிறகு விற்பனைக்கான வாய்ப்பு இல்லாததால் அவர்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மூங்கில் கைவினைஞரான தனக்கோடி கூறுகையில், "ஆண்டுதோறும் இந்த 3 மாதங்கள் தான் எங்களது பொருள்கள் அதிகம் விற்பனையாகும் காலமாகும். வெட்டிவேர் பாய்கள், குச்சி பாய்கள், கூடைகள் போன்றவை அதிக அளவில் விற்பனை செய்வோம். அதில் இருந்து வரும் பணத்தை சேமித்து வைத்தே வருடம் முழுவதும் எங்கள் இதர செலவுகள், எங்கள் பிள்ளைகளின் கல்வி செலவுகளை சமாளித்து வந்திருக்கிறோம்.
இதனிடையே தமிழ்நாடு அரசால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் யாரும் இங்கு பொருள்களை வாங்க வருவதில்லை. இதனால் ஒரு வேளை உணவும் கிடைக்காத கஷ்டமான நிலையில் உள்ளோம்.
நிவாரணமாக தமிழ்நாடு அரசு வழங்கிய ரூபாய் 1000 எங்களுக்கு எத்தனை நாள்களுக்கு வரும் எனத் தெரியவில்லை. இங்கு வாழும் 26 குடும்பங்களும் ரேஷன் கடைகளில் கிடைக்கும் அரிசியை வைத்தே வாழ்க்கையை நடத்திவருகிறோம். ஒரு ரூபாய் கூட கையில் இல்லாத வறுமை நிலைமையில் இருக்கிறோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில், எங்களுக்கும் நிவாரணம் வழங்கி நலிவடைந்திருக்கும் எங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு முன்வர வேண்டும். மேலும் சமூக அக்கறை கொண்டவர்களும் எங்களுக்கு உதவ வேண்டும்." என வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க :கரோனா அச்சுறுத்தல்: இந்தியாவில் உயிரிழந்த முதல் மருத்துவர்