தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட வழக்கு.. ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி! - சென்னை குற்றச் செய்திகள்

தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2023, 10:35 PM IST

சென்னை: கிண்டி அருகேவுள்ள மடுவண்கரை பகுதியில் தங்கள் நிறுவனத்தின் சிம் கார்டுகளை பயன்படுத்தி சட்டவிரோதமாக தனியார் தொலைத்தொடர்பு அமைப்பு செயல்பட்டு வருவதாக மத்திய தொலைத் தொடர்பு அதிகாரிகளிடம் ஏர்டெல் நிறுவனம் புகார் அளித்தது. ஜூலை மாதம் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர், தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் குழுவினருடன் அதிரடி சோதனை செய்தனர்.

அதில், அங்கு சிம் பாக்ஸ்கள் அமைத்து, வெளிநாட்டு அழைப்புகளை, உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடியில் ஈடுப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அங்கிருந்த சிம் பாக்ஸ்கள், சிம் அடிப்படையிலான வயர்லெஸ் இணைய ரூட்டர், சிம் கார்டுகள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்து, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த முகமது நசீர், ரமீஸ் பைசான், அப்துல் மாலிக், சுப்பிரமணி ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களில் சிலருக்கு எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், ரமீஸ் பைசான் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி RMT டீக்காராமன் விசாரித்தார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில், நாட்டிற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றியதால், அவற்றை முறையாக கண்காணிக்க இயலாது என்பதால், தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத தொலைபேசி நிலையம், சமூக விரோத செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம், தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம், தீவிரவாத அமைப்புகள் தங்களது அடையாளங்களை மறைத்து சட்டவிரோத தொலைபேசி நிலையங்களை பயன்படுத்தி இருக்கலாம் என குறிப்பிட்ட நீதிபதி, மனுதாரரின் ரமீஸ் பைசானின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தொடர்பான வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் சிலர் ஜாமீன் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி, அதை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், நீதித்துறை அதிகாரிகள் ஜாமீன் வழங்கும்போது இயந்திரத்தனமாக செயல்படுவதை விட, குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கின் தன்மையை புரிந்துகொண்டு, கடுமையாகவும், நேர்மையாகவும் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க:ரூ.9ஆயிரம் கோடி விவகாரம்: வங்கி மீது புகார் கொடுத்த கார் ஓட்டுநர்!

ABOUT THE AUTHOR

...view details