சென்னை:இரிடியத்தால் ஆன பொருளை விற்பனை செய்து, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஓய்வு பெற்ற ஐ.சி.எஃப். அதிகாரியிடம் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த கமலக்கண்ணன், பிரபாகரன் உட்பட நான்கு பேர், தங்களிடம் இரிடியத்தால் ஆன தவலை வடிவிலான பாத்திரம் ஒன்று இருப்பதாகவும், இதனை விற்பதற்காக பணம் கொடுத்தால், அதில் கிடைக்கும் லாபத் தொகையில் 250 கோடி ரூபாய் தருவதாகவும் கூறி பணி ஓய்வு பெற்ற ஐ.சி.எஃப். அதிகாரியான சென்னையை சேர்ந்த சின்னச்சாமி என்பவரிடம் ஒரு கோடியே 43 லட்ச ரூபாய் பெற்று ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கமலக்கண்ணன், பிரபாகரன் உள்ளிட்ட 3 பேரை கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய நபரான கமலக்கண்ணன் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணை வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், இந்த வழக்கில் தொடர்புடைய உமேஷ் ராஜ் என்பவர் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும், இந்திய அரசின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இரிடியம் சான்று உள்ளதாக கூறி, சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பொருளை வாங்க 6 ஆயிரம் கோடி ரூபாயை ஒரு நபர் வாங்கியுள்ளதாக கூறி போலி ரசீதை காட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் புகார் அளித்த ஓய்வு பெற்ற ஐ.சி.எஃப் அதிகாரி சின்னசாமி என்பவரிடம் ஒரு கோடியே 43 லட்ச ரூபாய் மோசடி செய்து உள்ளதாகவும் இன்னும் பலரிடம் இது போன்று மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிட்ட வழக்கறிஞர், விசாரணை நிறைவடையாத நிலையில், ஜாமீன் வழங்கினால் விசாரணையை பாதிக்கும் எனவே ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, வழக்கில் தொடர்புடைய உமேஷ் ராஜ் தலைமறைவாக உள்ளதாலும், இரிடியம் இருப்பதாக ரைஸ் புல்லிங் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளதால் தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:தருமபுரியில் விவசாய கிணற்றில் காலாவதியான ஆயிலை கலந்த மர்ம நபர்கள்.. கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்!