சென்னை அயனாவரம் பொன்வேல்புரம் நான்காவது தெருவில் வசித்துவருபவர் ஷர்மிளா(41). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அயனாவரத்தில் உள்ள சௌந்தரபாண்டியன் நாடார் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், ஷர்மிளா நேற்று வழக்கம்போல் பள்ளி முடிந்ததும் தனது இரண்டு குழந்தைகளையும் நடை பயணமாக ஆண்டர்சன் சாலை வழியாக வந்தபோது, ஆட்டோவில் வந்த பெண் ஒருவர் ஷர்மிளாவின் கையில் இருந்த பேக்கை பிடுங்கி சென்றுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த ஷர்மிளா கூச்சலிட்டதால் அருகிலிருந்த பொதுமக்கள் வேகமாக சென்ற ஆட்டோவை வழிமறித்து கொள்ளையில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து தாக்கினர். இதில், ஆட்டோ ஓட்டுநர் தப்பி சென்றுவிட்டார்.
இதன் பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அயனாவரம் காவல் துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்
அந்தப்பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த அர்ச்சனா (24) என்பது தெரியவந்தது.