இது குறித்து கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் 2020- 21ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப் படிப்பு, பிடெக் உணவுத் தொழில்நுட்பம், கோழியினத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு ஆகியவற்றிற்கான மாணவர் சேர்க்கைக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களிடமிருந்து கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுவருகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதியாக வரும் 28ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் நாள் அடுத்த மாதம் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை, இவ்வாண்டு 12,009 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில், கால்நடை மருத்துவத்திற்கு 9,787 மாணவர்களும், தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கு 2,222 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.