"சென்னை ஐஐடியில் பி.எட்- ஹைபிரிட் ஆன்லைன்" வகுப்புகள்- ஐஐடியின் இயக்குநர் காமகோடி சென்னை:ஐஐடி ரிசர்ச் பார்க்கில் நடைபெற்று வரும் ஜி-20 கல்வியியல் கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர், சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி 'ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு' சிறப்பு பேட்டியளித்துள்ளார். அப்போது, அவர் பேசியபோது, 'அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து, உலக அளவில் நல்ல கல்வியை உருவாக்க வேண்டும் என்பதே இந்த கருத்தரங்கின் விளைவாக இருக்கும். உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் கல்வி பெற வேண்டும் என்பது இதன் நோக்கம்.
ஒவ்வொரு நாட்டிலும் ஒரு விதமான சவால்கள் உள்ளன. அவற்றிற்கு தனித்தனியான தீர்வுகள் உள்ளன. ஒரு நாட்டில் உள்ள தீர்வு மற்றொரு நாட்டின் சவால்களுக்கு உதவலாம். எனவே, இந்த கருத்தரங்குகள் மூலம் சிறந்த தீர்வுகள் கிடைக்கலாம். தொழில் நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், ஆசிரியர்களுடன் கல்வி பயிலும் ஒரு அனுபவம் மாணவர்களுக்கு ஏற்படுவதில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்போது, பரிமாணம் அடைந்த கல்வியைப் பயின்று வருகிறார்கள். ஆன்லைன் வகுப்புகள் முழுவதுமாக கெடுதல் இல்லை. இதில் அதிக நன்மைகள் உள்ளன. இதன் மூலம் தான் லட்சக்கணக்கான மாணவர்களை சென்றடைய முடிகிறது. இந்த ஆன்லைன் கல்வியிலும் நேரடியாக மாணவர்களை வரவழைத்து அவர்களுக்கான சந்தேகங்களை கேட்டறிந்தால் அதுவே சிறந்த கல்வியாக வரும் தலைமுறைக்கு அமையும்.
கரோனா காரணமாக கடந்த 2 வருடங்கள் முழுவதுமாக கல்வி பாதிக்கப்பட்டது. உலக நாடுகள் அனைத்தும் டெக்னாலஜி மூலமாக கல்வியை எடுத்துச் சென்றார்கள். அது எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது காலப்போக்கில் தெரியும். பெரிய அளவில் தாக்கம் இருக்கக்கூடாது என்று தான் அனைவரும் விரும்புகிறோம்.
கற்றல் திறனைப் பொறுத்தவரை பள்ளியில் 100 சதவீதம் உள்ளது. உயர் கல்வியைப் பொறுத்தவரை 25 சதவீதம் தான் உள்ளது. தமிழ்நாட்டில் 50 சதவீதம் தான் உள்ளது. 2035க்குள் இந்திய அளவில் மேலும் 50 சதவீதம் உயர்த்தப்பட வேண்டும். "சென்னை ஐஐடியில் பி.எட்- ஹைபிரிட் ஆன்லைன்" மற்றும் நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
இதற்கான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். திறன் மிகுந்த ஆசிரியர்களை உருவாக்கி, பயிற்சி மேற்கொள்ள இது வழிவகை செய்யும்’ எனத் தெரிவித்தார். மேலும் ’5-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பாடத்திட்டத்தை அவர்களுக்கு சொல்லித் தர திறன் மிகுந்த ஆசிரியர்கள் இதன் மூலம் உருவாக்கப்படுவார்கள்’ எனத் தெரிவித்தார்.
மேலும், சென்னை ஐஐடியால் உருவாக்கப்பட்ட பாரத் ஒ.எஸ் குறித்து பல நிறுவனங்கள் ஆர்வமாக இருப்பதாகவும்; இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவில் பெரும்பான்மையான ஸ்மார்ட் ஃபோன்களில் இந்த ஓ.எஸ் (operation system) கண்டிப்பாக இருக்கும் எனத் தெரிவித்தார். மேலும், ஐஐடியில் பயிலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுப்பதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம் என்று ஐஐடியின் இயக்குநர் காமகோடி ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:"ஜெயலலிதா சொத்தில் பங்கு கேட்டு புதிய மனு" தீபா, தீபக் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு