சென்னை அயனாவரம் நியூ ஆவடி சாலையில் கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி ரவுடி சங்கர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அயனாவரம் காவல் ஆய்வாளர் நடராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த என்கவுன்ட்டர் திட்டமிட்ட படுகொலை என சங்கரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
மனித உரிமைகள் ஆணைய விதிகளின்படி, என்கவுன்ட்டர் செய்யப்பட்ட காவல் துறை சார்ந்தவர்களே வழக்கை விசாரிக்க முடியாது என்பதால் டிஜிபி உத்தரவின் படி, வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணை அலுவலராக டிஎஸ்பி கண்ணன் நியமிக்கப்பட்டு விசாரணையை தொடங்கினார்.
கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் ராஜா, காவல் ஆய்வாளர் நடராஜ் உள்பட 11 காவல் துறையினர், இரண்டு சாட்சியங்கள் என 13 பேர் சிபிசிஐடி காவல் துறையினர் முன்னிலையில் ஆஜராகி தங்கள் விளக்கத்தினை அளித்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக, சென்ற மாதம் சிபிசிஐடி அலுவலகத்தில் சங்கரின் தாயார் கோவிந்தம்மாள், சகோதரி ரேணுகா, அவரது மகன் மோகன், சங்கரின் அண்ணி உஷா ஆகிய 4 பேரும் ஆஜராகி சுமார் ஒன்றரை மணி நேரம் தங்கள் விளக்கத்தை அளித்தனர். முன்னதாக அயனாவரம் வீட்டிலும் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.