தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அயனாவரம் பாலியல் வழக்கு - தண்டனையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

சென்னை: அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி, குற்றவாளி உமாபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

chennai hc, சென்னை உயர்நீதிமன்றம்
chennai hc

By

Published : Feb 18, 2020, 12:00 PM IST

Updated : Feb 18, 2020, 12:28 PM IST

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்றுத் திறனாளி சிறுமியைப் பாலியல் வன்கொடுமைச் செய்ததாக, 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின் போது, குற்றம்சாட்டப்பட்ட பாபு என்பவர் உயிரிழந்து விட்டதால், மீதமுள்ள 16 பேர் மீதான வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கில் பிப்ரவரி 3ஆம் தேதி தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் தோட்டப் பணியாளர் குணசேகரன் என்பவரை விடுதலை செய்து உத்தரவிட்டார். மீதமுள்ள 15 பேரில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒன்பது பேருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற உமாபதி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், "எலக்ட்ரீசியனாக பணிபுரிந்த என்னை, வழக்கு தொடர்பான குற்றப் பத்திரிக்கையில் பிளம்பர் எனக் குறிப்பிட்டுள்ளனர். முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் இடம் பெறவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே எனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த முன்னுக்குப்பின் முரணான வாக்குமூலத்தை விசாரணை நீதிமன்றம் நிராகரித்து இருக்க வேண்டும். எனக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச தண்டனையான ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்வதோடு, தண்டனையை நிறுத்தி வைத்து எனக்கு பிணை வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : கம்பம் இளைஞர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் - தாய், சகோதரர் கைது!

Last Updated : Feb 18, 2020, 12:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details