சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி ஆகியோரது இணைப்பு வங்கிக் கணக்கிலிருந்து 99,999 ரூபாயை மர்ம நபர்கள் திருடிய நிலையில், மீண்டும் அவரது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு விட்டதாக ஆக்சிஸ் வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க எம்.பி மற்றும் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.99,999-ஐ மர்ம நபர்கள் திருடியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், “தானும், தனது மனைவியும் கூட்டு வங்கிக் கணக்கு வைத்துள்ளோம். இந்நிலையில், மலேசியாவில் இருக்கும் தனது மனைவியை, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், ஆக்ஸிஸ் வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி, வங்கி விபரங்கள் மற்றும் ஏடிஎம் கார்டு எண்களை கேட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, தன் மனைவி வங்கி விபரங்களை தர மறுத்த நிலையில், தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் ரூ.99,999-ஐ சைபர் மோசடி கும்பல் திருடியுள்ளனர். மேலும், தனது மனைவியின் தொலைபேசிக்கு மூன்று முறை தொடர்பு கொண்டு ஓடிபி (OTP) மற்றும் ஏடிஎம் கார்டு விபரங்களை மர்ம நபர்கள் கேட்ட நிலையில், தனது மனைவி அதை தெரிவிக்காத நிலையிலும், வங்கிக் கணக்கிலிருந்து ரூ.99,999 பணம் திருடப்பட்டு இருப்பது தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தனது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை திருடிய சைபர் மோசடி கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, மோசடி தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.