தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ் கற்றலுக்கு விழிப்புணர்வு - லட்சுமி ராமசாமி குழுவினர் அசத்தல் முயற்சி - Dr. Lakshmi Ramasamy

சென்னை: மாணவ-மாணவியர் மத்தியில் தமிழ் கற்றல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ் வளர்ப்போம் என்ற தலைப்பில் பரதநாட்டிய ஆசிரியர் டாக்டர் லட்சுமி ராமசாமி குழுவினர் தமிழ் வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

lakshmi

By

Published : Aug 23, 2019, 7:18 PM IST

சங்கத் தமிழ் நூல்களை மையமாக வைத்து அதில் அகம்-புறம் என்பதை விளக்கி அதன் உள் அர்த்தங்களோடு ஆறு நடனக் கலைஞர்கள் மூலம் தமிழ் மொழியை வளர்க்க முயற்சி மேற்கொண்டு வருகிறார் முத்ராலயா பரதநாட்டிய பள்ளியின் நிறுவனர் இயக்குனரான டாக்டர் லட்சுமி ராமசாமி.

இக்குழுவினர் பல்வேறு உலக நாடுகளுக்குச் சென்று நாட்டிய நாடகத்தை அரங்கேற்றியிருக்கின்றனர். அந்த வகையில் பரத நாட்டியத்தோடு தமிழ் மொழியின் பெருமை மிகு அடையாளங்களை இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில் புதிய யுத்தியை அவர்கள் கையாண்டு வருகின்றனர்.

ஐந்திணை பற்றிய விளக்கத்தில் கபிலர் பாடலை எடுத்துக்கொண்டு 'நீரின்றி அமையாது உலகு' என்பது எத்தனை சரியோ அப்படியே தன் தலைவனின்றி தான் இல்லை என்கிற பாடலுக்கு தன் முகம் மற்றும் உடல் அசைவுகள் மூலம் சங்க காலத்திற்கு அழைத்துச் செல்லும் விதமாக பரதநாட்டியக் கலை மூலமாக விளக்கமளிக்கப்பட்டது.

புறம் பகுதியின் 279-ஆம் பாடலான 'இப்படியும் வீரமிகு பெண் இருப்பாளோ' என்பதை விளக்க போரில் தன் தந்தை மற்றும் கணவனை இழந்தாலும் சிறுவனான தன் மகனையும் போருக்கு தயார்படுத்தும் தமிழச்சியின் பெருமையை போற்றும் விதமான ஒக்கூர் மாசாத்தியார் பாடலுக்கு நடனமாடிய கலைஞர் திவ்ய ஸ்ரீ லட்சுமி தமிழர்களின் வீரத்தை கண்முன் நிறுத்தினார்.

தமிழ் கற்றலுக்கு விழிப்புணர்வு செய்த லட்சுமி ராமசாமி குழுவினர்

நற்றிணையில் தலைவி வீட்டுச் சிறை வைக்கப்பட்டபோதிலும் தன் தலைவன் மீது கொண்ட காதலால் அவனோடு சென்று சேர் என தோழி கூற, குதிரைகள் பூட்டிய தேரில் வரும் தன் தலைவனோடு சென்று சேர்வதை உலோச்சனார் பாடல் மூலம் உண்மை சம்பவம் போல குதிரை ரூபத்தை தோற்றுவிக்கும் வகையில் நடனத்தில் காட்டி வியப்பை ஏற்படுத்துகின்றனர் இந்த நடனக் கலைஞர்கள்.

தமிழ் மொழி பல்வேறு வகையில் இன்றைய காலக்கட்டத்தில் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், மாணவ-மாணவியரிடையே தமிழ் கற்றலை ஊக்குவித்து பெருமை மிகு தமிழின் சிறப்பை வளர்த்தெடுக்கும் பணியில் டாக்டர் லட்சுமி ராமசாமி குழுவினர் ஈடுபட்டுள்ளது பாராட்டுக்குரியது. இக்கலைஞர்களின் தமிழ் வளர்க்கும் பணி மென்மேலும் தொடர ஈடிவி பாரத் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள்.

ABOUT THE AUTHOR

...view details