சென்னை: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில், தேசிய தர உறுதி நிர்ணய திட்ட விருது மற்றும் கர்ப்பிணிகளுக்கான மகப்பேறு அறை, அறுவை அரங்கின் தரம் உயர்த்தும் திட்டச் சான்றிதழை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
நாடு முழுவதும் 12ந் தேதி முதல் 17 ந் தேதி வரை “நோயாளி பாதுகாப்பு விழிப்புணர்வு” வாரமாக அனுசரிக்கப்படுகிறது. நோயாளிகளின் பாதுகாப்பு என்பது தேசியத் தர உறுதி நிர்ணயத் திட்டம் மற்றும் மகப்பேறு அறை, கர்ப்பிணிகளுக்கான அறுவை அரங்கின் தரம் உயர்த்தும் திட்டங்களின் அடிப்படை அம்சமாக உள்ளது.
நம் மாநிலத்திலுள்ள கிராமம் மற்றும் நகர்ப்புற அரசு ஆரம்பச் சுகாதார மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளின் சுகாதார சேவைகளின் தரத்தை உயர்த்துவதற்காக, தேசியத் தர உறுதி நிர்ணய திட்டம் 2015ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
கர்ப்பிணிகளுக்கான மகப்பேறு அறை மற்றும் அறுவை அரங்கின் தரம் உயர்த்தும் திட்டம் 2018ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டம் குழந்தை பேற்றின் போது அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சைகளின் தரத்தை மேம்படுத்துவதையும், மரியாதைக்குரிய மகப்பேறு பராமரிப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒன்றிய அரசு, 2018-19 முதல் 2020-21 வரையிலான மூன்று வருடங்களில் தமிழ்நாட்டில் தேசியத் தர உறுதி நிர்ணயத் திட்டம் செயல்படுத்துவதில் சமுதாய சுகாதார மையங்கள் பிரிவில் முதல்நிலை பரிசும், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் துணை மாவட்ட மருத்துவமனைகள் பிரிவில் தேசிய அளவில் இரண்டாம் நிலை பரிசும் தமிழ்நாட்டிற்கு வழங்கியுள்ளது.
இந்தச் சாதனையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்து, மாநில தர உறுதி குழுவினரைப் பாராட்டி வெற்றிக் கோப்பையைப் பரிசளித்தார். மேலும், தேசிய தர உறுதி நிர்ணயத் திட்டத்தின் கீழ் 127 அரசு மருத்துவ மையங்களுக்குத் தரச்சான்றிதழ் விருதுகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
இதையும் படிங்க:இந்திய கடற்படையில் ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் பி17ஏ ரக போர்க்கப்பல் அறிமுகம்