மகாகவி பாரதியாரின் நினைவைப் போற்றும்வகையில் அவர் நூற்றாண்டின் நினைவாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், “மகாகவி பாரதியின் வாழ்க்கை குறித்தும், அவரின் படைப்புகள் குறித்தும் ஆய்வுசெய்த மூத்த ஆய்வாளர்களான மறைந்த பெ. தூரன், ரா.அ. பத்மநாபன், தொ.மு.சி. ரகுநாதன், இளசை மணியன் ஆகியோரின் நினைவாக அவர்தம் குடும்பத்தாருக்கும், மூத்த ஆய்வாளர்களான சீனி விசுவநாதன், பேராசிரியர் மணிகண்டன் அவர்களுக்கும் தலா மூன்று லட்சம் ரூபாயும், விருதும், பாராட்டுச் சான்றிதழும் அரசால் வழங்கி கௌரவிக்கப்படும்” என்று அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மகாகவி பாரதியார் மூத்த ஆய்வாளர்களான சீனி விசுவநாதன், பேராசிரியர் மணிகண்டன் ஆகியோருக்கு பாரதி நினைவு நூற்றாண்டு விருது, விருதுத்தொகை தலா மூன்று லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் ஆகியவற்றை முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
இதையடுத்து தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், “திருக்குறள் முற்றோதல் செய்து குறள் தேர்வுசெய்யப்பட்டு பரிசுத்தொகை வழங்கப்படாமல் நிலுவையிலுள்ள மாணவர்களுக்கு இந்த ஆண்டு பரிசுத்தொகை வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல், ஆண்டுக்கு 70 மாணவர்கள் என்ற உச்சவரம்பு நீக்கப்பட்டு உயர்த்தப்படும்” என மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.