கரோனா தொற்று பரவிவரும் நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி பொது வெளியில் மாடு, ஒட்டகம் போன்ற விலங்குகளை பலியிடுவதற்கும், இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கக் கோரி மதுரை வடஇந்தியர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஹூக்கம் சிங் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், ஒரே நேரத்தில் பல இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விலங்குகள் கொண்டு வரப்படுவதாகவும், அப்போது உரிய விதிகள் பின்பற்றப்படாமல் விலங்குகள் வதை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது இடங்களில் விலங்குகளை கொல்வதற்கு தடை விதித்து கடந்த ஜூன் 20ஆம் தேதி மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளதாகவும், மஹாராஷ்டிரா மாநில அரசு பக்ரீத் பண்டிகையை வீட்டில் வைத்து எளிய முறையில் கொண்டாடும்படி அறிவித்ததோடு, பொது இடங்களில் மத விழாக்களாக நடத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த மனு குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். பக்ரீத் பண்டிகை நெருங்கிவிட்டதையும், தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பொது இடங்களில் விலங்குகளை பலியிட தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும், காவல் துறைக்கும் உத்தரவிட்டனர்.