சென்னை:அரசு கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தீக்காய சிறப்பு மையத்தின் பேராசிரியர் ஏஞ்சலின் செல்வராஜ் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில்,’’கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீக்காய சிறப்புப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் தீபாவளி பண்டிகைக்கு 20 படுக்கைகளுடன் ஒரு பிரிவு செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு வெடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்பாக வெடிக்க வேண்டும். குழந்தைகள் வெடிக்கும் போது பெரியவர்கள் அருகில் இருக்க வேண்டும். காலில் செருப்பு அணிந்தும், பருந்தியினாலான ஆடைகளை உடுத்தியும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட முறையில் தயார் செய்யப்பட்டுள்ள பட்டாசுகளை மட்டுமே வெடிப்பது நல்லது.
ஜெல்லட்டின் மருந்துகளைப் பயன்படுத்தி அதிகளவில் சத்தம் தரும் வகையில் உருவாக்கப்படும் நாட்டு வெடிகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்த வெடிகளை கைகளில் வைத்து வெடித்தால், கையில் காயம் ஏற்படும். ராக்கெட் போன்ற வெடிகளைத் திறந்தவெளிப் பகுதியில் நேராக வைத்து வெடிக்க வேண்டும். சாய்த்தோ, படுக்க வைத்தோ வெடிக்கும் போது எதிரில் உள்ள வீட்டில் சென்று வெடிக்கும் அபாய நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.