திருவள்ளூர்: ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்தவர்கள், ராகவன் - குப்பம்மாள் தம்பதி. இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர். அதேநேரம் இந்த 4 பிள்ளைகளும் திருமணம் முடிக்காமல் இருந்தனர். இதனிடையே பெற்றோர் இருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும் இவர்களில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளை ஆகிய இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இதனால் குடும்பத்தில் கடைசி மகளான சுந்தரி பாய் மற்றும் அவரது அக்கா ஜானகி ஆகிய இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஜானகியும் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி உயிரிழந்துள்ளார். இவ்வாறு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உயிரிழந்த அதிர்ச்சியில், கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி சுந்தரி பாயும் உயிரிழந்துள்ளார். ஆனால், அவர் இறப்பதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில், “எனது வீடு, 54 சவரன் நகை, வங்கி மற்றும் தபால் நிலையங்களில் 61 லட்சம் ரூபாய் பணம் ஆகிய அனைத்தையும் காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மையத்திற்கு கொடுத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். மேலும் எனது எதிர் வீடு மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகியோருக்கு கொடுக்க வேண்டிய பணத்தையும் கொடுத்து விடுங்கள். அதேபோல் எனது வீட்டில் வளர்த்து வந்த 10க்கும் மேற்பட்ட பூனைகளை பத்திரமாக பாதுகாக்கும் படியும் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.