தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு! - டாஸ்மாக் திறக்க ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு எதிர்ப்பு

சென்னை: ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் டாஸ்மாக் கடை திறப்பதைக் கண்டித்து பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

tasmac
tasmac

By

Published : Sep 21, 2020, 3:37 PM IST

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள 7ஆயிரம் வீடுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். இப்பகுதிக்குச் செல்லும் 60 அடி பிரதான சாலையில் தனியார் மருத்துவமனைகள், அரசு, தனியார் பள்ளிக்கூடங்கள், திருமண மண்டபங்கள், கோயில்கள், குடியிருப்புகள், வணிக வளாகங்களும் அமைந்துள்ளன. மேலும், இந்தப் பிரதான சாலை வழியாக தான், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பெரியார் நகர், குமரன் நகர், ஸ்ரீ ராம் நகர், காமராஜர் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும் பயணித்துவருகின்றனர்.

இச்சாலையில் உள்ள ஆவடி மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறம் புதியதாக அரசு, டாஸ்மாக் கடை அமைத்துவருகிறது. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த பொது நல சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள், மாவட்ட ஆட்சியர், ஆவடி தாசில்தார், டாஸ்மாக் மேலாளர் ஆகியோரைச் சந்தித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்தனர்.

அதில், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 60 அடி சாலையில் அரசு டாஸ்மாக் கடையை எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது எனவும், திறந்தால் மக்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், இதுகுறித்து வருவாய் துறை, டாஸ்மாக் அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், டாஸ்மாக் கடையைத் திறப்பதற்கான பணிகளும் வேகமாக நடைபெற்றுவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் புதியதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடை முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, கடையை திறக்க கூடாது என மீண்டும் வருவாய்த் துறை, டாஸ்மார்க் அலுவலர்களைச் சந்தித்து மீண்டும் முறையிடுங்கள் எனக் காவல் துறையினர் அறிவுரை கூறினார்கள்.

இதன்பிறகு, பொதுமக்கள் கடை முன்பு கோஷமிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details